மருந்தின்றி தவிக்கும் பாகிஸ்தான்... மருத்துவமனையில் நோயாளிகள் இறக்கும் அபாயம்!!

மருந்தின்றி தவிக்கும் பாகிஸ்தான்... மருத்துவமனையில் நோயாளிகள் இறக்கும் அபாயம்!!
Published on
Updated on
1 min read

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால், மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.  மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

சிக்கியுள்ள பாகிஸ்தான்:

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு எந்த வழியிலும் நிவாரணம் கிடைக்கவில்லை. இப்போது நாட்டின் சுகாதார அமைப்பும் மோசமான பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்புக் குறைவால், பெரும்பாலான மருந்து உற்பத்தியாளர்களுக்கு இறக்குமதி பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.  இறக்குமதி மீதான தடை இன்னும் நான்கு முதல் ஐந்து வாரங்களுக்கு நீடித்தால், நாடு மோசமான மருத்துவ நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று பாகிஸ்தான் மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

மருத்துவ நெருக்கடி ஏன்?:

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால், மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.  மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் இறக்குமதி குறைந்து வருவதால், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது.  அதேநேரம், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியுறும் நிலை உருவாகியுள்ளது.

மயக்க மருந்து பற்றாக்குறை:

இதயம், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு ஆபரேஷன் தியேட்டர்களில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே மயக்க மருந்து இருப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இதே நிலை நீடித்தால், பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நெருக்கடி எவ்வளவு பெரியது?:

பாகிஸ்தானில் 95% மருந்து உற்பத்தி இறக்குமதியையே சார்ந்துள்ளது.  இந்தியா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன.  ஆனால் பொருளாதார பற்றாக்குறையால், பெரும்பாலான மருந்து உற்பத்தியாளர்கள் கராச்சி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைப் பெற இயலவில்லை.

இதனிடையில் மருந்து உற்பத்திக்கான செலவு அதிகரித்து வருவதாக மருந்து தயாரிப்பு தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.  எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்துக் கட்டணம், பாகிஸ்தான் ரூபாயின் கடும் வீழ்ச்சி ஆகியவையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கைகள்?:

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க, பாகிஸ்தான் மருத்துவ சங்கம் அரசாங்கத்தின் தலையீட்டை நாடியுள்ளது.  இருப்பினும், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இன்னும் எத்தனை நாட்களுக்கு இருப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டுமே பார்க்கிறார்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com