ஆடிமாதத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் குத்துவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாட்டில் உள்ள பிடாரி அம்மன், திருமேனி அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பாப்பாநாடு, சோழகன்குடிக்காடு, ஆம்பலப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்து 208 பெண்கள் ஒன்று கூடி, உலக நன்மைக்காகவும், பருவமழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும் குத்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காமாட்சி, பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழாவை ஒட்டி ஆயிரத்து எட்டு குத்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குத்து விளக்கு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க : இந்தியா VS ஜப்பான்: விறுவிறுப்பான போட்டியை சமனில் முடித்த இந்தியா!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரத்தினலிங்கேசுவரர் கோயிலில் 108 பெண்கள் பங்கேற்று குத்து விளக்கு பூஜை நடத்தினர். இதில் திருமண தடை நீங்கவும், குழந்தை பேறு உண்டாகவும், கால்நடைகள் நோய் நொடியின்றி நீண்ட கால வாழவும் வேண்டி பூஜை நடத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் காத்தாயி அம்மன் கோயிலில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், 108 குத்து விளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பிடாரி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பிறகு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையின் போது மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.