
திரையரங்குகளில் இன்று பிரமாண்டமாக வெளியான ஜெயிலர் படத்தை பார்ப்பதற்காக ஜப்பானிய ரசிகர்கள் சென்னை வந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர், பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜெயிலர்' . இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம், நடிகர் ரஜினியின் 169-வது படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரஜினி ரசிகர்களை மிகுந்த எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்திய இப்படம், தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்ப்பதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரையரங்கிற்குள் சென்றனர்.
உலகம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில், ஜெயிலர் திரைப்படத்தை காண்பதற்காக சென்னை காசி திரையரங்கிற்கு ஜப்பானிய ரசிகர்கள் வருகை புரிந்துள்ளனர். இந்நிகழ்வு ரஜினி ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.