அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

Published on
Updated on
1 min read

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக - பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதல் இரு கட்சியினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதிமுகவுக்கு எதிராக பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக வைத்த கோரிக்கையை பாஜக மேலிடம் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

இவ்வாறாக அதிமுக பாஜக இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளா்கள்,  அதிமுக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4  மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், அதிமுக தலைமையிலான  கூட்டணியில் பாஜக இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக புதிய கட்சிகளை இணைத்து அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.   

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com