தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்க உத்தரவு...!

Published on
Updated on
1 min read

வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

2024-ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் தானியங்கி சோதனை நிலையம் மூலமாக மட்டுமே வாகனங்களுக்கான தகுதிச் சான்றை பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதே நேரம், போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்பின் மூலமாக தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். 

இந்நிலையில் சோதனை நிலையங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சில பரிந்துரைகளை முன்வைத்து போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி, செங்குன்றம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திண்டிவனம், திண்டுக்கல், மதுரை தெற்கு உள்ளிட்ட 18 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டும், அதற்கான டெண்டர், அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இத்துடன் தானியங்கி சோதனை நிலையங்களுக்கான சில வரன்முறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிலையத்தில் 12 ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும், 15 ஆண்டுகளுக்கு மேலான இருசக்கர வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெற ரூ.650, 3 சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு ரூ.850, கனரக வாகனங்களுக்கு ரூ.1250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதிச்சான்று காலாவதியான பிறகு ஒவ்வொரு நாட்களுக்கும் தலா ரூ.50 கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும், இந்த நிலையங்களில் பிரேக் அமைப்பு, முகப்பு விளக்கு, பேட்டரி, டயர், பிரதிபலிப்பான் உள்ளிட்ட சுமார் 40 சோதனைக்கு வாகனங்கள் உட்படுத்தப்படும் என்றும், இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் தகுதிச்சான்று வழங்கப்படமாட்டாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com