நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஐடி திருத்த விதிகள்....நாம் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் என்னென்ன?...தெரிந்து கொள்ளலாம்!!!

நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஐடி திருத்த விதிகள்....நாம் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் என்னென்ன?...தெரிந்து கொள்ளலாம்!!!

நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள்.  மக்கள் பின்பற்ற வேண்டிய சமூக ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகளை வெளியிட்டார் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

அட்டவணை மொழிகள் 22லும்:

தகவல் தொழில்நுட்ப சட்ட திருத்தத்தின் கீழ், ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள், ஆங்கிலத்தைத் தவிர, அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் தங்கள் விதிகள், விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கை மற்றும் பயனர் ஒப்பந்தம் பற்றி தங்கள் பயனர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம்.

இரண்டிலும் சேவை விதிகள்:

சமூக ஊடக நிறுவனங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான அறிவிப்பின்படி, தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வலைத்தளம், மொபைல் பயன்பாடு இரண்டிலும் சேவை விதிகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மேலும், முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு இடைத்தரகர் நிறுவனங்கள் இந்திய அரசியலமைப்பில் உள்ள சிவில் உரிமைகளை மதிக்க வேண்டும் எனவும் புகார்களுக்கு தீர்வு காண 72 மணி நேரம் ஒதுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

72 மணிநேரத்திற்குள் நடவடிக்கை:

விவாதத்துக்குரிய கருத்துக்களை அகற்றுவது தொடர்பான புகாரைப் பெற்ற 72 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப நிறுவனம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மற்ற எந்த புகாரும் 15 நாட்களுக்குள் தீர்வளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது மத்திய அமைச்சகம்.

எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சகம்:

ஆபாசமான, தவறான, சிறார் பாலியல் துன்புறுத்தல்கள், பிறரின் தனியுரிமையை மீறுவது, சாதி, அடிப்படையிலான செய்திகளோ அல்லது பணமோசடியை ஊக்குவிக்கும் வகையிலான தகவல்களோ அல்லது நாட்டின் சட்டத்தை மீறும் செயல்களையோ வெளியிட கூடாது என நிபந்தனை விதித்துள்ளது மத்திய அமைச்சகம்.

தனியுரிமையில் சிறப்பு கவனம்:

அனைத்து விதிமுறைகளும் அட்டவணையின் 22 மொழிகளிலும் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் சேவைகள் பயனர்களுக்குக் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.  இதில், தனியுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.

22 அட்டவணை மொழிகள்:

இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, போடோ, சந்தாலி, மைதிலி மற்றும் டோக்ரி. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆசிய பயணங்கள்...!!!!