இந்துக்களும், மூஸ்லீம்களும் அண்ணன் – தம்பிகள்...எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது!

இந்துக்களும், மூஸ்லீம்களும் அண்ணன் – தம்பிகள்...எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது!
Published on
Updated on
1 min read

கோவையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் இடையிலான ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

அனைத்து ஜமாத் கூட்டமைப்புத் தலைவரை வரவேற்ற செயல் அலுவலர்:

கடந்த 23-ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த உக்கடம் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு கோவை அனைத்து ஜமாத் கூட்டமைப்புத் தலைவர் இனையத்துல்லா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இன்று வருகை தந்தனர். அவர்களுக்கு சங்கமேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் வரவேற்பு அளித்தனர். 

அண்ணன் தம்பிகளாக வாழ்கிறோம்:

இதனைத் தொடர்ந்து, அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இனையத்துல்லா, மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் கோவிலுக்கு வருகை தந்ததாக கூறினார். இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், தீவிரவாதத்திற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது:

மேலும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை கோவையில் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது எனவும், கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் தேர் திருவிழா நடக்கும் பொழுது இஸ்லாமியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததை நினைவு கூற வேண்டும் எனவும் இனையத்துல்லா  சுட்டிக்காட்டி பேசினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com