தமிழக பாஜகவிற்கு ஒரு மாநில தலைவர் போதும்...ஆளுநர் மாநில தலைவராக செயல்பட வேண்டாம்...டி.ஆர்.பாலு பதிலடி!

தமிழக பாஜகவிற்கு ஒரு மாநில தலைவர் போதும்...ஆளுநர் மாநில தலைவராக செயல்பட வேண்டாம்...டி.ஆர்.பாலு  பதிலடி!

தமிழக பா.ஜ.க.விற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் என்று கழகப் பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவிக்கும் ஆளுநர்:

திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறித்து, திமுகவின் நாடாளுமன்ற எம்.பி. டி.ஆர்.பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருப்பவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம்,  திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன.

அரசியல் வாதியாக பேசும் ஆளுநர்:

பட்டியலின மக்கள் குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் அவதூறு பேச்சு பேசினார். அவரது திட்டம்தான் என்ன என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் அல்ல. வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச்செல்வதுதான் அவரது நோக்கமாக இருந்து வருகிறது. இதுவரை பொதுவாக நுண்ணிய வர்ணாசிரம அரசியலைப் பேசி வந்த அவர், இப்போது வெளிப்படையாகத் தேர்தல் அரசியல் வாதியாகப் பேசத் தொடங்கிவிட்டார். 

நாளிதழ்கள் வெளியிட்ட செய்தி:

'திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய்ப் பேச வேண்டியதை, ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. இவருக்குத் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக ஆகும் ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்து, இது போன்ற அபத்தங்களைப் பேசட்டும்.  அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட - அதே நேரத்தில் நியமனம் செய்யப்படும் பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் லகானை செலுத்தப் பார்ப்பது அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குவது ஆகும்.

தமிழ்நாடு எப்படி இருக்கிறது?:

சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் அவரது மூளையில் படிந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தன்மையைக் காட்டுகிறது என்றால், திராவிட ஆட்சி குறித்த அவரது விமர்சனம் பா.ஜ.க.வின்  தேர்தல் அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்தர பிரதேசமும் இன்று எப்படி இருக்கிறது - தமிழ்நாடு எப்படி இருக்கிறது? என்பது கூட அவருக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது என்ன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

இதையும் படிக்க: சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் நிரந்தரமல்ல... முதலில் எம்.ஜி.ஆர்...பிறகு ரஜினிகாந்த்...இப்போ...சீமான் பரபரப்பு அறிக்கை!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு! ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு! இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு! ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு! கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு! தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு! கல்வியின் இரண்டாவது இடம்! - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக மத்திய அரசே பாராட்டி இருக்கிறது.

திராவிட மாடல்:

இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இதுவும் அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்தான். தேசிய சராசரி பணவீக்கமானது 6.2 விழுக்காட்டில் இருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்தது. ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கமானது 5.37 விழுக்காடாகக் குறைந்தது. வாங்கும் திறன் அதிகமாகி இருக்கிறது தமிழகத்தில். சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்ததுதான் 'திராவிட மாடல்' வளர்ச்சியாக அமைந்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மட்டுமல்ல, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டி இருக்கிறார் எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த வெற்றியானது, சில அரசியல் சக்திகளுக்கு எரிச்சலைத் தரலாம்.  அதில் ஒருவராக ஆளுநர் இருப்பதுதான் அதிர்ச்சியைத் தருகிறது.

திராவிட சொல் எதனால் ஆளுநருக்கு சுடுகிறது?:

இப்படி எல்லாம் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்ற ஐயமே எழுகிறது. அதனால்தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்குக் கோபம் வருகிறது. 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது? அந்தச் சொல் எதனால் இவருக்குச் சுடுகிறது? 'திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது' என்கிறார் அவர். தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம். 

ஒரு மாநில தலைவர் போதும்:

எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக  ஆளுநர் ரவி அவர்கள் பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது என்று டி.ஆர்.பாலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.