பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது. மக்களின் உயிரைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குளிர்கால கூட்டத்தொடர்:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது. இந்த அமர்வு மொத்தம் 17 வேலை நாட்கள் நடக்கும். இந்த அமர்வின் போது, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
இதன் போது, ஜம்முவில் மக்களை பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் கூறியுள்ளார். இதனுடன், பயங்கரவாத சம்பவங்களில் உள்ளூர்வாசிகள் இறந்தது குறித்தும் மாநிலங்களவையில் நித்யானந்த் ராய் பேசியுள்ளார்.
ஆன்லைன் மிரட்டல்:
8 பத்திரிக்கையாளர்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து ஆன்லைன் மூலமாக மிரட்டல்கள் வந்தது தொடர்பாக வந்த எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்த நித்யானந்த் ராய், காஷ்மீரில் பணிபுரியும் 8 பத்திரிகையாளர்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து ஆன்லைன் அச்சுறுத்தல்கள் வந்ததன் காரணமாக அவர்களில் 4 பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஸ்ரீநகரில் உள்ள ஷெர்கரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சகிப்புத்தன்மை இல்லா அரசின் கொள்கை:
தொடர்ந்து பேசிய நித்யானந்த் ராய், பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது என்றும் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் மக்களின் உயிரைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் ஜம்மு காஷ்மீரில் எந்த தாக்குதலையும் முறியடிக்க போலீஸ், ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் உளவுத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
-நப்பசலையார்