சென்னை விமான நிலையத்தில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிக்காக ரூ. 10 கோடி செலவில் 135 அடி உயரத்தில் புதிய டவர் அமைக்கும் பணி தொடங்கியது.
அனலாக் அலைவரிசை:
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே அவசர தகவல் தொடர்புக்காக வாக்கி டாக்கி முறை கடந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சேவை அனலாக் அலைவரிசை முறையில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கோளாறு என்ன:
இதில் அவ்வப்போது இணைப்புகள் கிடைக்காமலும், கிடைத்தாலும் தெளிவாக இல்லாமல், இடை இடையே இடையூறு ஏற்படுகிறது. மேலும் இது மிகவும் குறுகிய தூரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடிவதால் இந்திய விமான நிலைய ஆணையம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
மாற்றப்பட்ட சேவை:
இதையடுத்து டிஜிட்டல் வடிவில் டி.எம்.ஆர் "டிரங்க்ட் ரேடியோ சேவை"என்ற நவீன தகவல் தொழில்நுட்ப வசதி சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு வசதியாக சென்னை விமான நிலையத்தில் 135 அடி உயரத்திற்கான தகவல் தொடர்பு கோபுரம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நவீன தகவல் தொழில்நுட்ப சேவை சென்னை விமான நிலையத்தில் வெகு விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.
டெட்ரா தொழில்நுட்பம்:
இது செயல்பாட்டுக்கு வந்த பின் சென்னை விமான நிலையத்தை மையமாக வைத்து சுற்றிலும் உள்ள 6 கிலோ மீட்டர் தூரம் வரை வாக்கி டாக்கி சேவைகளை பயன்படுத்த முடியும். "டெட்ரா"என்ற ஐரோப்பிய தொழில் நுட்பத்தில் முழுவதும் டிஜிட்டல் வடிவில்பிக்7 தொலைதொடர்பு துறை சேவை இருக்கும்.
மேம்பாடு என்ன?:
இதனால் இனிமேல் விமான நிலைய அதிகாரிகள் ஊழியர்கள், விமான நிறுவன அதிகாரிகள் ஊழியர்கள், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குதல் புறப்படுதல் பகுதியில் ஓடு பாதையில் பணியில் உள்ள ஊழியர்கள் ஒரே நேரத்தில் இதை பயன்படுத்த முடியும்.
ஒட்டு கேட்க முடியாது?:
மேலும் இவர்களின் வாக்கி டாக்கி பேச்சுகளை, வெளி ஆட்கள், தீவிரவாத, சமூக விரோதிகள், யாரும் ரகசியமாக ஓட்டு கேட்க முடியாது. இவர்கள் பேசும் தகவல்களை இவர்களே பதிவு செய்து செய்யும் வசதியும் புதிய தகவல் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகளில் சேர்வதற்கு தனித்தனியாக மத்திய தகவல் தொடர்பு துறையில் அனுமதி பெற வேண்டியது இல்லை. இந்திய விமான நிலைய ஆணையமே இணைத்து விடும்.
முன்னேறிய தொழில்நுட்பம்:
இதனால் சென்னை விமான நிலையத்தில் தகவல் தொடர்புத்துறை மேலும் ஒரு படி முன்னோக்கி சென்று உள்ளது. முழு பாதுகாப்புகளுடன் கூடிய புதிய தகவல் தொழில்நுட்பம் ரூ.10 கோடி செலவில் சென்னை விமான நிலையத்தில் அமைத்து உள்ளது.
முதல் முறையாக:
இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையங்களிலும் இந்த புதிய தகவல் தொழில்நுட்பம் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. சென்னை விமான நிலையத்தில் தான் முதல் முறையாக ஏற்படுத்தப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் வெகு விரைவில் புதிய தகவல் தொழில்நுட்பம் செயல்பாட்டிற்கு வந்ததும் விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது போன்றவைகள் மேலும் மேம்படுத்தப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பெரு நாட்டில் தொடரும் போராட்டம்....பதவி விலகுவாரா அதிபர்?!!!