லாக் கப் மரணத்திற்கு என்றுதான் முடிவு கட்டுமோ? எடப்பாடி பழனிசாமி வேதனை!

லாக் கப் மரணத்திற்கு என்றுதான் முடிவு கட்டுமோ? எடப்பாடி பழனிசாமி வேதனை!
Published on
Updated on
1 min read

காவல்துறை விசாரணை என்ற பெயரில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு திமுக அரசு என்றுதான் முடிவு கட்டுமோ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேதனை தெரிவித்துள்ளார்.  

கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருட்டு நகை வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும், ரோஜா கோல்டு அவுஸ் நகைக் கடை உரிமையாளருமான ரோஜா ராஜசேகரையும், அவரது மனைவியையும் விசாரணைக்காக அழைத்து சென்று துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு வீட்டிற்கு வந்த ரோஜா ராஜசேகர் வேளாங்கன்னி - எர்ணாகுளம் அதிவிரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மன உளைச்சலே காரணம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆதரவு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பட்டுக்கோட்டை ரோஜா கோல்டு அவுஸ் நகைக் கடை உரிமையாளர் ரோஜா ராஜசேகர், காவல் துறை கொடுத்த தொல்லைகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திருட்டு நகையை வாங்கியதாக கூறி,  ராஜசேகரை விசாரணைக்கு அழைத்து சென்றதும், காரணமே இல்லாமல் அவரது மனைவியையும் விசாரணைக்கு உட்படுத்தி கொடுமைப் படுத்தியதும், அதனால்  அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுக அரசு காவல் துறையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தமிழகம் மயான பூமி ஆகிவிடும் என்றும் எடப்பாடி எச்சரித்துள்ளார்.  

அத்துடன், ராஜசேகர் தற்கொலை வழக்கை தனி அமைப்பை நியமித்து நடத்த வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com