தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் தொடர்பான தகவல்...!

Published on
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த  ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 16 ஆயிரத்து 795 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவம்பர் மாதம் 12 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக நவம்பர் 9 முதல் 11 ஆகிய தேதி வரை சென்னையில் நாள்தோறும் இயக்கக்கூடிய இரண்டாயிரத்து 100 பேருந்துகளுடன் நான்காயிரத்து 675  பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.

பிற ஊர்களுக்கு ஐந்தாயிரத்து 920 பேருந்துகள் என மொத்தமாக 16 ஆயிரத்து 795 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்காக நவம்பர் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சென்னையில் நாள்தோறும் இயக்கப்படும் இரண்டாயிரத்து 100 பேருந்துகளுடன் மூவாயிரத்து 167 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.

பிற ஊர்களில் இருந்து மூவாயிரத்து 725 பேருந்துகள் என மொத்தமாக 13 ஆயிரத்து 292 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து  இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து  இயக்கப்படவுள்ளன.

தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்திலிருந்து திண்டிவனம் மாா்க்கமாக திருவண்ணாமலை, போளூா், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன, திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம், காட்டுமன்னாா்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, மாா்த்தாண்டம் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூா், திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com