டெல்லி நிர்வாக அதிகார மசோதா...மாநிலங்களவையில் இன்று அமித்ஷா தாக்கல்...!

டெல்லி நிர்வாக அதிகார மசோதா...மாநிலங்களவையில் இன்று அமித்ஷா தாக்கல்...!
Published on
Updated on
1 min read

இரண்டு நாள் இடைவெளிக்கு பின்னா் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், டெல்லி அவசர சட்டம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மாநிலங்களவையில் டெல்லி சேவைகள் அவசரச் சட்டத்தை மாற்றும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்யவுள்ளாா். மக்களவையில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து இன்று மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

இதன் எதிரொலியாக அனைத்து எம்.பிக்களும் இன்றைய அமர்வில் தவிர்க்காமல் பங்கேற்குமாறு காங்கிரஸ் கொறடா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே அவசர சட்டத்தின் மூலம் டெல்லியின் உரிமைகளை வலுக்கட்டாயமாகப் பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி இம்மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் தொிவித்துள்ளாா்.

மேலும் ராகுல் காந்தி மீதான கிரிமினல் அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை தொடர்ந்து ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், மசோதாவை நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில் அம்மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. 

இதற்கிடையே நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி தலைவர்கள் மசோதாக்கள் குறித்து இன்று காலை ஆலோசனை நடத்தவுள்ளனா். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com