விழுப்புரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் மற்றும் கலப்பட மது அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், 13 ஆம் தேதி இரவு எக்கியார்குப்பத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராய பாக்கெட்டுகளை குடித்த ஆறு பேர் மயக்கமடைந்தனர். இதனையடுத்து, அனைவரும் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் எக்கியார் குப்பத்தில் சோதனையிட்ட போலீசார் கள்ளச் சாராயம் அருந்தி மயக்க நிலையில் இருந்த 5 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இரு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஆறு பேர் 14 ஆம் தேதி உயிரிழந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கள்ளச்சாராய விற்பனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும், ஆறு பேர் உயிரிழப்புக்குக் காரணமான சாராய வியாபாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரும் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனிடையே, கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாயும் சிகிச்சை பெறுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், மரக்காணம் கள்ளச் சாராய சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பேருக்கரணை கிராமத்தில் கலப்பட மது அருந்திய ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த இரு துயர சம்பவங்கள் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், மது விலக்குப் பிரிவு ஆய்வாளர் ஆகிய மூன்று பேரும் மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட மூன்று பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல் ஐஜி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கள்ளச் சாராய வேட்டையை தீவிரப் படுத்துமாறு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்தினருக்கும் சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறுதல் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரக்காணம் செல்கிறார்.