ஆளுநர் பதவிக்கு அழகல்ல...ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

ஆளுநர் பதவிக்கு அழகல்ல...ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

பதவிப் பிரமாணத்திற்கு முரணாகவும், மாநில நலனுக்கு எதிராகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். 

இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கு மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால், நாகரீகமாக அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : கலாஷேத்ரா விவகாரம் : நடிகை அபிராமி பரபரப்பு பேட்டி...!

அவசர சட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி தனது கடமையில் இருந்து ஆளுநர் தப்பித்து வருவதால், 14 கோப்புகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் அலட்சியமாக கருத்துகளை வெளிப்படுத்துவது சட்ட வரையறைகளை மீறிய செயல் என்றும் விமர்சித்துள்ளார். 

சட்டப்பேரவையின் மாண்பை குறைக்கும் வகையில் ஆளுநர் பேசி வருவது அவருக்கும், அவரின் பதவிக்கும் அழகல்ல. ஆகவே, அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றிடும் வகையில் ஆர்.என்.ரவி செயல்படுவார் என தான் நம்புவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.