கலாஷேத்ரா விவகாரம் : நடிகை அபிராமி பரபரப்பு பேட்டி...!

கலாஷேத்ரா விவகாரம் : நடிகை அபிராமி பரபரப்பு பேட்டி...!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் தமிழ்நாடு முழுவதும் பூதாகரமானது. கலாஷேத்ரா கல்லூரி மற்றும் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மனுக்கு நடிகை அபிராமி ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை வைத்து மிகப் பெரிய நாடகம் நடைபெறுவதாக சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையரகத்தில் நடிகை அபிராமி புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி என்றும், கலாஷேத்ரா குறித்து ஒருதலைப்பட்சமாக செய்திகள் பகிரப்படுவது நியாயமில்லை என்றும் கூறினார். 

கடந்த 89 ஆண்டுகளாக கலாஷேத்ரா கல்லூரியில் இப்படி ஒரு புகார் எழவில்லை என்றார். ஒருபடி மேலே போய்,  'கலாஷேத்ரா' என்ற ஒரு பெயரை கூட சரியாக உச்சரிக்க தெரியாத நிறைய பேர் அதுபற்றி அவதூறு பரப்புவது மிகவும் வேதனை அளிப்பதாகவும், ஒருதலை பட்சமான தகவல்களை மட்டும் கேட்டுவிட்டு எப்படி உறுதியாக பேசுகிறார்கள் என்றும் அபிராமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிக்க : லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறிய டிட்கோ, சிப்காட்...அமைச்சர் பெருமிதம்!

தொடர்ந்து பேசிய அவர், கலாஷேத்ரா இயக்குநர் ரேவதிக்கு எப்போதும் துணை நிற்பேன் என்றார். அதிகார போட்டி காரணமாகவே இந்த பிரச்சனை வெடித்துள்ளதாகவும், இதற்கு மாணவிகள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். 

பாலியல் குறித்து மாணவிகள் ஒருபுறம் குற்றம் சாட்டினாலும், மறுபுறம் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருருக்கும் நடிகை அபிராமி ஆதரவு கரம் நீட்டியுள்ளார். ஆம், சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு என்பதை மறந்து விடக்கூடாது என்ற நடிகை அபிராமி, ஆசிரியருக்கு தனது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார்.

'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவிட்டு இப்படி பேசலாமா என தன்னிடம் கேள்வி எழுப்பப்படுவதாகவும், தான் எப்போதும் உண்மைக்காகவே குரல் கொடுத்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.