நீள்வட்ட சுற்றுப்பாதை குறைப்பு முயற்சியால் நிலவின் மேற்பரப்பை சந்திரயான்-3 நெருங்கியுள்ள நிலையில், விண்கலம் எடுத்துள்ள நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. கடந்த 1-ம் தேதி புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது.
அதன்படி கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் விண்கலம் நுழைந்த நிலையில், நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் முதற்கட்டப்பணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பு அருகே சென்றுள்ளது. அடுத்தகட்டமாக சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் பணி வரும் 9-ம் தேதி மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் நடைபெற உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதனிடையே சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் அருகே சுற்றி வரும் வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான் - 3 விண்கலத்தை வரும் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.