விறுவிறு வாக்குப்பதிவு...காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

விறுவிறு வாக்குப்பதிவு...காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 10 புள்ளி 10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸை சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா இந்தாண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெற்றது. திமுக கூட்டணி சார்பில் மறைந்த திருமகன் ஈ.வே.ரா-வின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அதேபோல அதிமுக சார்பில் தென்னரசு என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமம் இன்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குபதிவில், காலை 9 மணி நிலவரப்படி 10 புள்ளி 10 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆண்கள் 12 ஆயிரத்து 679 பேர், பெண்கள் 10 ஆயிரத்து 294 பேர் என மொத்தம் 22 ஆயிரத்து 963 பேர் இதுவரை வாக்களித்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, காலை 6 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. 52 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 238 வாக்குச் சாவடிகளில் ஆயிரத்து 206 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்ட 32 வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com