முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் செய்த மத்திய அரசை விமர்சித்துள்ளார். அரசாங்கம் முதலில் டிவி நெட்வொர்க்குகளை கைப்பற்றியது, தற்போது அது சமூக ஊடக தளங்களை கையகப்படுத்தப் போகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
”முதலில் டிவி நெட்வொர்க்கைக் கைப்பற்றிய அவர், இப்போது சமூக ஊடக தளத்தை கையகப்படுத்தப் போகிறார். இது ஒரு வகையில் நாட்டின் ஊடகங்களை கைப்பற்றுவதாகும்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் இவற்றைப் பார்க்கும்போது ஒரே விதி, ஒரு அரசியல் கட்சி, ஒரே ஆட்சி முறை, என்ற நிலையை நோக்கி நகர்கிறோம்.” என்றும் கூறியுள்ளார்.
ஐடி விதிகளில் திருத்தம் செய்வது குறித்து அவர் கூறுகையில், ”அரசுக்கு பாதுகாப்பானது, மற்றவர்களுக்கு பாதுகாப்பற்றது. இதுவே இந்த அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. சாமானியர்களுக்கு சமூக ஊடகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன்பிறகு 'அவதூறான' அறிக்கைகளை வெளியிட்டதற்காக மக்கள் மீது வழக்கு தொடரப்படும்.” எனத் தெரிவித்துள்ளார் கபில் சிபல்.
மேலும் அவர் கூறுகையில், ”சமூக ஊடகங்களின் சக்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த அரசாங்கத்திற்கும் அதன் அதிகாரத்தைப் பற்றி எந்த யோசனையும் இல்லை. அரசாங்கம் அதனைப் பயன்படுத்தி மக்களை பலவீனப்படுத்தாமல், மக்களுக்கு மேலும் பலம் கொடுக்க வேண்டும்.” என்று அறிவுரை கூறியுள்ளார் கபில் சிபல்.