
கிருஷ்ணகிாி அருகே கணவரை போலீசாா் தாக்கியதாக கூறி காவல் நிலையம் முன்பு தா்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, கிட்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (34), இவருக்கும், இவரின் பெரியப்பா முருகன் (70), என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சொத்து தகராறு இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் இளையராஜா, முருகன் மற்றும் அவரின் மகன்கள் கோபால் உள்ளிட்டோருக்கு சொத்து சம்மந்தமாக காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
இது சம்மந்தமாக முருகன் மற்றும் இளையராஜா இரு தரப்பிலும் விசாரித்துக் கொண்டிருந்தபோது, இளையராஜாவின் அண்ணன் பாரதிராஜா மொபைல் போனில் படம்பிடித்ததாக கூறப்படுகிறது. போலீசார் எதற்கு படம்பிடிக்கிறாய் என கேட்டுள்ளனர். இதையடுத்து பாரதிராஜா அங்கிருந்து சென்றுவிட்டதால் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்வதாக கூறி, உள்ளே உட்கார வைத்துள்ளனர்.
இதையும் படிக்க: சிறுவனின் புற்றுநோய் கட்டிகளை அகற்றி, மருத்துவா்கள் சாதனை!
இதை பார்த்த அவரின் மனைவி கமலாதேவி (30), கணவர் இளையராஜாவை தாக்கி போலீசார் கீழே தள்ளியதாக கூறி தனது மூன்று வயது மகள் துவாரகபிரியாவுடன் காவல் நிலையம் எதிரில், தர்மபுரி–திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து அரை மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டார்.
போலீசார் சமரசம் செய்தும் கமலாதேவி கேட்காமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபடவே பெண் போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கி காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து விசாரித்து முறைப்படி கோர்ட்டை அணுகி தீர்வு காணுங்கள் என கூறி போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
பெண் ஒருவர் சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஆம்லெட் கேட்டு கடை உரிமையாளரை தாக்கிய ஆசாமிகள்!