வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர் என்று ஏமாற்றி வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்கள் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூரைச் சேர்ந்தவர் வினோத்பாபு. இவர் தன்னை வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் எனவும் பாகிஸ்தானில் நடந்த டி20 உலக கோப்பை வீல்சேர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வென்று கோப்பையை பெற்றதாகவும், 20 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் கோப்பையை வென்றதாகவும் கூறி ஒரு கோப்பையுடன் மாவட்டம் முழுவதும் உலா வந்தார். அந்த கோப்பையை காட்டி அரசியல்வாதிகள் அமைச்சர் உட்பட அனைவரிடமும் வசூல் வேட்டை நடத்தினார்.
அது மட்டுமின்றி பாத்திரக்கடையில் வாங்கிய கோப்பையுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சரோடு வினோத் பாபு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களிலும் நாளிதழ்களிலும் வெளிவந்ததை தொடர்ந்து உண்மையான வீல்சேர் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி அடைந்து உளவுத்துறையில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து உளவுத்துறையினர் நடத்திய விசாரணையில் இவர் ஒரு டுபாக்கூர் என்பது தெரியவந்தது.
இவர் சாதாரண அரசியல்வாதிகள் முதல் முதலமைச்சர் வரை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வந்தது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போலி வீல்சேர் அணி கேப்டன் வினோத் பாபு செயலால் தங்களைப் போன்ற உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு அவமானமாக இருப்பதாகவும் உடனடியாக போலி கிரிக்கெட் வீரர் வினோத் பாபுவையும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமநாதபுரம் மாவட்ட வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்கள் ஏபிஜே மிசைல் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ராமநாதபுரம் எஸ்பி தங்கதுரையை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.