வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் பயனபடுத்தி வந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையம், இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம், இரு முறை நேரடியாக வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளதாகவும், இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு நபர் ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து மூன்று மாதங்கள் கடந்து விட்டதாக கூறிய நீதிபதிகள், விசாரணை குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!