உலக தடகள சாம்பியன்சிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
19 ஆவது உலக தடகள சாம்பியன்சிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் கடைசி நாளான நேற்றிரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இறுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார், டி.பி.மனு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எரிந்து தங்கப்பதக்கை கைப்பற்றினார். இதன் மூலம் 40 உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனை படைத்தார். கிஷோர் குமார் 5 ஆவது இடத்தையும் டி.பி.மனு ஆறாவது இடத்தையும் பிடித்தனர்.
இதனையடுத்து, நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. நீரஜ் சோப்ராவின் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நீரஜ் சோப்ரா தனது விளையாட்டுத் திறமையால் சிறந்து விளங்குகிறார் என்றும், அவரது அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம் ஆகியவை அவரை ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த விளையாட்டு உலகின் சின்னமாக விளங்குவதாகவும் பாராட்டியுள்ளார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய தடகளத்தின் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் சாதனைகளால் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்வதாகவும், இத்தருணம் இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் நினைவு கூரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நீரஜ் சோப்ரா மீண்டும் நம்மை பெருமையடையச் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள நீரஜ் சோப்ராவின் வீட்டில் அவரின் பெற்றோர்களும் உறவினர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.