ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இந்தியா 3 வெள்ளி உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது.
சீனாவின் ஹங்சோவ் நகரில் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று அதிகாரப் பூர்வமாக தொடங்கியது.
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் மெஹூலி கோஷ் மற்றும் ஆஷி சௌக்சே ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இதே பிரிவில் மற்றொரு வீராங்கனை ரமிதா ஜிண்டால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதேபோல், லைட் வெயிட் துடுப்புப் படகு போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அர்ஜூல் லால் மற்றும் அரவிந்த் சிங் இருவரும் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். எட்டுபேர் பங்கேற்கும் பிரிவிலும் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதேபோல், பாபுலால் யாதவ் மற்றும் லேக் ராம் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
இருபது ஓவர் மகளிர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியுடன் மோதிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ரோபோட்டிக் சின்னங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன. சென்சென், காங்காங், மற்றும் லியான்லியான் ஆகிய மூன்று ரோபோ சின்னங்கள் ஹங்சௌ நகரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன.