சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா... பந்தை பயன்படுத்தியதில் விதிமுறை மீறலா?!!!

சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா... பந்தை பயன்படுத்தியதில் விதிமுறை மீறலா?!!!
Published on
Updated on
1 min read

நாக்பூர் டெஸ்டில் முதல் நாள் பந்துவீசும்போது ஜடேஜா,  முகமது சிராஜின் கையிலிருந்து எதையோ எடுத்து அவரது விரலில் தடவினார்.  இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா:

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே சர்ச்சை தொடங்கியுள்ளது.  நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஜடேஜா அற்புதமான மறுபிரவேசம் செய்தார்.  ஆனால் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவரது மறுபிரவேசம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.  

சர்ச்சை என்ன?:

நாக்பூர் டெஸ்டின் முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அவரது விரலில் எதையோ தடவியுள்ளார்.  இதை கவனித்த ஆஸ்திரேலிய ஊடகங்களும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ரசிகர்களும் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.  ஆஸ்திரேலிய அணி ரசிகர்கள் இதை ஜடேஜா வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தியதாக கூறி வருகின்றனர். 

இந்திய தரப்பில் விளக்கம்:

ஜடேஜா தனது விரலில் வலி நிவாரணி கிரீம் தடவிக்கொண்டிருந்ததாக இந்திய அணி விளக்கம் அளித்துள்ளது.  நாக்பூர் டெஸ்டின் முதல் நாளில் அதிக முறை ஜ்டேஜா பந்து வீசினார்.  அவர் கிட்டத்தட்ட 22 ஓவர்கள் பந்து வீசியுள்ளார்.  ஆஸ்திரேலியா 63.5 ஓவர்களில் மொத்தம் ஐந்து இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டது.  இதில், 37.5 ஓவர்களை ஜடேஜா மற்றும் அஷ்வின் இணைந்து வீசினர்.  அத்தகைய சூழ்நிலையில், ஜடேஜாவின் விரலில் வலி ஏற்பட்டதன் காரணமாக வலியில் இருந்து விடுபட, சிராஜின் கையிலிருந்து கிரீம் எடுத்து விரலில் தடவினார் ஜடேஜா என விளக்கமளித்துள்ளனர்.. 

விதிமுறை மீறல்:

கிரிக்கெட் சட்டங்களின்படி, பந்துவீச்சாளர் தனது கைகளில் எந்த வகையான பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்பு நடுவரின் அனுமதியைப் பெற வேண்டும்.  அதை அவர் பயன்படுத்துவதால் பந்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com