எங்கள் சாம்பியன்கள் மனிதாபமற்ற முறையில் நடத்தப்படுவது வேதனையளிக்கிறது என மல்யுத்த வீராங்கனைகளை ஆதரித்து 1983ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் அணி அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் தங்கள் பதக்கங்களை ஹரித்துவாரின் கங்கையில் வீராங்கனைகள் தூக்கியெறியச் சென்றதும் பேசுபொருளானது. இந்நிலையில் பல ஆண்டு முயற்சி, தியாகம், மனவலிமை உள்ளிட்டவற்றின் அடையாளமான பதக்கங்கள், தேசத்திற்கே பெருமையளித்தவை என 1983ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
எங்கள் சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்படுவது வேதனையளிக்கிறது எனவும் கங்கையில் பதக்கங்களை தூக்கியெறிவோம் என அவசர முடிவெடுக்க வேண்டாம் எனவும் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர். விரைவில் அவர்தம் கோரிக்கைகள் கேட்கப்பட்டு பிரச்னைகள் தீர்க்கப்படும் என நம்புவதாகவும், நாட்டில் சட்டம் ஒழுங்கு மேலோங்கட்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. கபில்தேவ், மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த், சயூத் கிர்மானி, யஷ்பால் சர்மா, மதன்லால், பல்வீந்தர் சிங் சது, சந்தீப் பாட்டில், கிர்த்தி ஆசாத், ரோகர் பின்னி ஆகியோரின் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.