காரைக்குடியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டதில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது. அப்போது சீமான் பேசியதாவது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு பெரிதாக தெரிந்தது. தற்போது வெங்காயம் தக்காளி விலை பெரிதாக தெரிகிறது. காரணம் விவசாயத்தை கைவிட்டது தான். விவசாய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் கூறுகிறார். அதை அவர்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். 5 ஏக்கர் விளை நிலத்தை பறித்து ஏர்போர்ட் கட்டுகின்றனர், எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் தலைநகரில் சாலைகள் மோசமாக உள்ளது. ஆனாலும் வளர்ச்சி என்கின்றனர். 50 ஆண்டுக்கும் மேலாக மாறி, மாறி 2 கட்சிகள்தான் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அதன் மூலம் ஓட்டு வாங்க வேண்டும் என்பது இல்லை. காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டும் என்பதுதான் முதன்மையாக உள்ளது, எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் 2 ஆண்டுகளை கடந்தது, யுகத்தை கடந்தது போன்று உள்ளது. எல்லா இடமும் மரணம். காவல்துறை தற்கொலை. தவித்த வாய்க்கு தண்ணீர் தர லாயக்கற்ற அரசு. தனியார் முதலாளிகளிடம் வாங்கி குடிக்க வேண்டியுள்ளது. அரசு தரமுடியாத கல்வியை தனியார் முதலாளி தருகின்றார். அரசை விட அவர்கள் வலிமையானவர்களா? அப்படி பட்ட ஆட்சி இருந்தால் என்ன? போனால் என்ன? எனக் கடிந்து பேசியுள்ளார்.
மொத்தமாக இவர்களை ஒழித்து விட்டு வேறு ஒரு அரசை கட்டமைக்க வேண்டும். மக்களுக்குள் மாற்று சிந்தனை, எழுச்சியை உருவாக்க வேண்டும். இன்னும் மக்கள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை. மோடி ஆட்சியமைக்க எம்.பி.க்கள் தேவை என்றால் தற்போதைய அரசு சென்றுவிடும். பல கட்சிகள் சரணடைந்துள்ளன. ஆனால் நாங்கள் போராடுவோம். எங்கள் கொள்கை, கோட்பாடு வேறு. எந்த காலத்திலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுவோம். சட்டமன்ற தேர்தலில் நான் சிவகங்கையில் நிற்க வாய்ப்பு இல்லை. காரைக்குடியில் நிற்க வாய்ப்பு உள்ளது, எனவும் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்து விட்டனர். என் காசை எடுத்து எனக்கு கொடுப்பது ஒரு நலத்திட்டமா? தேர்தலில் அனைத்து குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் என்று கூறினார்கள். ஆனால் தற்போது தகுதி பார்த்து கொடுப்போம் என்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு, என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
மேலும், ஆளுநர் அரசியல் பேசலாம். அரசியல் என்பது வாழ்வியல். அரசியல் இல்லாமல் ஆளுநர் ஆக முடியாது. அண்ணாமலையை விட ஆளுநர் அதிகம் அரசியல் பேசுவதால் யார் தலைவர் என்பதில் குழப்பம் வருகிறது, என விமர்சித்துள்ளார்.
மேலும், ஆளுநரை சமாளிக்க முடியாமல் திணறும் தமிழக முதல்வர் தற்போது கமிஷனர், தேர்தல் ஆணையர் என எல்லாவற்றிலும் வட இந்தியர்களை நியமித்து வருகின்றார், ஏதோ ராஜஸ்தானில் வாழ்ந்துகொண்டிருப்பது போன்று உள்ளது, என பேசியுள்ளார்.
மேலும், கூட்டணி வைத்தால்தான் ஓட்டு போடுவேன் என என்னிடம் யாரும் கூறவில்லை. என்னிடம் மக்கள் கேட்பது கூட்டணி வைக்காதீர்கள் என்றுதான். எங்கள் கருத்துக்கு உகந்த கருத்துடைய கட்சி வந்தால் அது குறித்து சிந்திக்கலாம், என்றும் தெருவித்துள்ளார்.