குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதால் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிகளவில் குவிந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமாகவும், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்பட்டு வருவது குற்றாலம். இங்கு ஆண்டுதோறும் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதும், தென்காசி மாவட்டத்தில் குளு குளு காற்று சாரல் மழையான சீசன் துவங்கிவிடும்.
குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாத காலம் சீசன் களை கட்டி அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் அருவியில் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. ஆனாலும் வனப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் சிறிதளவு தண்ணீர் விழுந்துக்கொண்டிருந்தது.
ஆனால் கடந்த சில தினங்களாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் அதிகரிக்கும் போது குளிப்பதற்கு தடையும், தண்ணீர் குறையும் போது குளிப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்ததால், அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து சீரானது. இதனைத் தொடர்ந்து காலை முதல் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வருவதால் அருவிக்கரைகள் முமுவதும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகரித்து வரும் நிலையிலும் போதிய அளவு போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிக்க: மக்களே உஷார்... ஏ டி எம் மையங்களில் புதிய மோசடி!!