கோடநாடு கொலை வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி, வருகின்ற ஒன்றாம் தேதி, தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் அதிமுக கொடியோடு பங்கேற்போம் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச் செயலாளராக தன்னை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி அனைவரது காதிலும் பூ சுற்றுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்," 2018 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் தனது இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்தபடி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்பது தற்போது வரை தொடர்வதாகவும், நிபந்தனையின் பேரில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பதவி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணைய செயலாளருக்கு, புகார் அனுப்பியுள்ளதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார். எனவே அதிமுக தனக்கு சொந்தம், கொடி எங்களுக்கே சொந்தம் என யாரும் கூறிக்கொள்ள முடியாது. அந்த அடிப்படையில், கோடநாடு கொலை வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி, வருகின்ற ஒன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் அதிமுக கொடியோடு பங்கேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் தமிழ்நாடு டிஜிபி உள்ளிட்டோரிடம் முறையாக அனுமதி பெற்று, விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வோம் என்றும் புகழேந்தி கூறியுள்ளார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, ஐபிஎஸ் என்பதை மறந்துவிட்டு, ஈபிஎஸ் ஆக செயல்படுவதாகவும், அண்ணாமலையும், பழனிசாமியும் ஒருவருக்கொருவர் அவதூறாக பேசிவிட்டு, தற்போது பழனிசாமியை அண்ணாமலை, அண்ணன் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது எனவும் புகழேந்தி விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை கூட்டத்தில் பங்கேற்க பாஜக அழைத்திருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. விரைவில் அதிமுக யாருடையது என்பது அனைவருக்கும் புரியம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || ரயில் படிக்கட்டில் அமர்வதில் பிரச்சனை... தவறி விழுந்த இருவர்!!