அர்ஜென்டினாவில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்…காரணம் இது தான்!

அர்ஜென்டினாவில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்…காரணம் இது தான்!

அரசாங்கத்தின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த ஆயிரக்கணக்கான அர்ஜென்டினா மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் சம்பள உயர்வு மற்றும் வேலையின்மை பிரச்சினைகளை முதன்மயாக உள்ளடக்கியுள்ளது.

ஊதிய உயர்வு கோரி போராட்டம்

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் பொருளாதார நெருக்கடியால் ஏழைகளின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 40% ஆக உயர்ந்துள்ளது, ஏனெனில் அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஆண்டுதோறும் 70% பணவீக்க விகிதத்திற்கு தீர்வு காண போராடுகிறார்.

பெரும்பாலான தொழிற்சங்கங்கள் மற்றும் பல இடதுசாரி குழுக்களின் கொடிகளை ஏந்தியபடியும், மேளம் அடித்தும், ஜனாதிபதி மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். மேலும் பரவலான பொருளாதாரச் சுமையைக் குறைக்க மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசு செலவிட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

அதிகரிக்கும் பணவீக்கம்

தினமும் எங்கள் ஊதியத்தின் சில பகுதிகளை இழக்கும் இந்த அளவிலான பணவீக்கத்தை எங்களால் தொடர முடியாது என்று பெரும்பாலான அரசாங்க ஊழியர்களை கொண்ட சி.ஜி.டி தொழிற்சங்கத்தின் தலைவர் பாப்லோ மொயனோ கூறினார்.

மளிகைக் கடைகள் மற்றும் பிற கடைகளில் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உயர்த்தப்படுகின்றன, இது கடந்த மாதம் மட்டும் 7.4% உயர்ந்துள்ளது, இது இருபது ஆண்டுகளில் மிக அதிகபட்சமான உயர்வாகும்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய மொயனோ, அதிபர் பெர்னாண்டஸை விலைகளைக் கட்டுப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். மற்ற தொழிற்சங்கத் தலைவர்களும் மொயனோவின் கருத்துகளையே எதிரொலித்தனர். "எந்த வேலையும் இல்லை, சம்பளம் போதுமான அளவு உயர்த்தப்படவில்லை" என்று  காகிதத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தின் தலைவர் ரமோன் லுக் கூறினார்.