இலங்கையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் சாத்தியமா?

இலங்கையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் சாத்தியமா?

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக தற்போது சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். போராட்டத்தில் மக்களின் உண்மையான விருப்பங்களை வென்றெடுப்பதற்கு, அதன் தவறான அம்சங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தென்னிலங்கையின் பௌத்த பிக்குகளின் முதன்மைச் சங்கத்தின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையினருடனான சந்திப்பின் போது அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானம் தொடர்பாக அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ரணில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில கட்சிகளிடம் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்தார். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தென்னிலங்கையின் பௌத்த பிக்குகளின் பிரதம சங்க தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு அனைத்து கட்சிகளின் நிலைத் தன்மைக்காக செயல்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.

சட்டவிரோத, அரசியலமைப்புக்கு முரணான மற்றும் குண்டர் பயங்கரவாதச் செயல்களை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம் என்றும், மக்களுக்கு ஒன்றும் செய்யாத காரணத்தினால் தான் மக்கள் போராட்டங்கள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டதாகவும் சோபித நஹிமி தெரிவித்தார். இதேவேளையில், அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்கும் போது அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுத்து திறமைகளின் அடிப்படையில், அமைச்சக பொறுப்புக்களை பகிர எதிர்பார்த்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நாராஹென்பிட்டி எலிப்பிட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள ராமஞ்ஞை நிக்காய பௌத்த பீடத்தின் தலைமையகத்திற்கு நேற்று சென்ற ஜனாதிபதி, மாநாயக்கர் மகுலேவே விமல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதுடன் அதன் பின்னர் பௌத்த பிக்குகளை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசாங்கம் தற்போது சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. மேலும் இந்த கட்சிகளின் பல்வேறு கொள்கைகளை கொண்ட அணிகள் இருக்கின்றன. பேச்சுவார்த்தையில் பெரும்பான்மையான நிலைப்பாடுகளுக்கு இடமளித்து, சரியான வேலைத்திட்டத்தை நாட்டுக்காக முன்வைப்பது இதன் நோக்கம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.