வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பள்ளியில் உள்ள கட்டிடத்தில் கடந்த 7 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்லூரிக்கான இடம்
இந்நிலையில் அந்த கல்லூரிக்கு நிரந்திர இடத்தை தேர்வு செய்து கல்லூரி கட்டிட பணியை உடனடியாக துவங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர்.
பல முறை போராட்டம்
வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் மாணவ, மாணவிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் மாணவ மாணவியரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கல்லூரிக்கான இடம் தேர்வு செய்யக் கோரி இதே போல் பல தடவை ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.