அந்தர் பல்டி அடித்த அமெரிக்கா...போலந்து ஏவுகணை தாக்குதல் காரணம் யார்?!!

அந்தர் பல்டி அடித்த அமெரிக்கா...போலந்து ஏவுகணை தாக்குதல் காரணம் யார்?!!

போலந்து மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது ரஷ்யா அல்ல என தெரிய வந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யாவை குற்றம்சாட்டி வந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், இதனை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. என்னதான் நடந்தது போலந்தில் ? பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்..

ஆதரவு அளித்த அமெரிக்கா:

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த 9 மாதங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் எல்லைக்கு மிக அருகில் போலந்தின் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கிழக்கு போலந்தில் உள்ள ப்ரெஸெவோடோ என்ற கிராமத்தில் இத்தாக்குதலில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாக ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முழுமையான விசாரணைக்காக போலந்துக்கு முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார். 

மறுப்பு தெரிவித்த ரஷ்யா:

ஆனால் ஏவுகணை வீசியது யார் எனத் தெரியாததாக ஆரம்பத்தில் இருந்தே கூறிவந்த போலந்து அதிபர் ஆண்டர்செஸ் டுடா, உதவிக்காக நேட்டோவை நாடியதாக குறிப்பிட்டார். தாக்குதலை முற்றிலுமாக மறுத்த ரஷ்யா, இது சதித்திட்டமாக இருக்கலாம் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஜி-20 தலைவர்களுடன் ஆலோசனை:

இதைத்தொடர்ந்து போலந்து ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக இந்தோனேஷியாவில் ஜி20 உச்சிமாநாட்டில் இருந்தவாறு நேட்டோ தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை மேற்கொண்டார். நேட்டோ கூட்டமைப்பின் கீழுள்ள ஒரு நாட்டின் மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், சட்டப்பிரிவு 5-ஐ பயன்படுத்தி நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் தாக்குதல் நடத்தலாம் என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்தது. 

அந்தர் பல்டி அடித்த அமெரிக்கா:

இந்நிலையில் தொடர்ந்து கூட்டத்தை முடித்துவிட்டுப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலந்தைத் தாக்கியது ரஷ்ய ஏவுகணையாக இருக்காது என குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், போலந்தில் விழுந்த ஏவுகணைகள், ரஷ்ய - போலந்து பாதையில் ஏவப்பட்டதற்கான வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஏவுகணையை உக்ரைன் படையினர் மறித்து தாக்கியபோதே, ஏவுகணை போலந்தில் விழுந்ததாக தற்போது அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யாவை எதிர்த்து வந்த அமெரிக்கா, திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போலந்தில் நிலவும் பதற்ற சூழலை கருத்தில்கொண்டு அவசரக் கூட்டத்திற்கு நேட்டோ திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க:   நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தது உண்மையா..? அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் தோல்விகள் கூறுவதென்ன?!!