பயங்கரவாதத்தை பரப்பும் நாடாக ஆப்கானிஸ்தான் மாறுவதை தடுக்க வேண்டும்- ஐ.நா சபை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்....

பயங்கரவாதத்தை பரப்பும் நாடாக ஆப்கானிஸ்தான் மாறுவதை தடுக்க வேண்டும் என ஐ.நா சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தை பரப்பும் நாடாக ஆப்கானிஸ்தான் மாறுவதை தடுக்க வேண்டும்- ஐ.நா சபை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்....

ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த ஒன்றரை வருடங்களில், 100 ஆண்டுகளில் சந்திக்காத ஒரு தொற்று நோயால் உலகம் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஒன்றரை வருடங்களில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறிய அவர், அவர்களின்  குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்

உலகில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவுக்கு வந்து தங்களது தடுப்பூசியைத் தயாரிக்குமாறு அழைப்பு விடுத்ததுடன்,இந்தியாவில் முதன்முறையாக டிஎன்ஏவை அடிப்படையாகக் கொண்ட தடுப்பூசியைத் தயாரித்துள்ளதையும் குறிப்பிட்டார்.

இந்த டிஎன்ஏ தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த செலுத்த முடியும் எனவும் தெரிவித்தார். இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 75 செயற்கைகோள்களை இந்தியா விண்ணில் செலுத்த உள்ளதாகவும் இந்தியாவை ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பு மையமாக உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் கூறினார்

உலகம் முழுவதும் தற்போது பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் அடிப்படைவாத சிந்தனை அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார். அடிப்படைவாத சிந்தனை உள்ள சில நாடுகள் பயங்கரவாதத்தை தங்களது அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், பயங்கரவாதம் அந்நாடுகளுக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் சர்வதே நாடுகள் கடல் வளத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டுமென்றும் கொள்ளையடிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தை பரப்பும் நாடாகவோ, பயங்கரவாதிகள் உருவாகும் நாடகாவோ செயல்படுவதை அனுமதிக்க கூடாது எனவும் சர்வதேச நாடுகளின் தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் மற்று சிறுபான்மையினர் சர்வதேச நாடுகளின் உதவியை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி அவர்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் எனவும் கூறினார்.இந்தியா பன்முகத்தன்மையில் உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.