மின்சாரம் இல்லாமல் வாகன வெளிச்சத்தில் - தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள்!!

பீகாரில் தேர்வு எழுதுவதற்கு முறையான ஏற்பாடுகள் ஏதும் இல்லாமல் மாணவர்கள் சிரமத்தோடு தேர்வு எழுதியுள்ளனர்.

மின்சாரம் இல்லாமல் வாகன வெளிச்சத்தில் - தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள்!!

பீகார் மாநிலத்தில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு இடைத்தேர்வு தொடங்கி நிலையில் கிழக்கு சாம்பரான் மோதிஹாரி நகரில் அமைந்துள்ள மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் கல்லூரியில் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று உள்ளது. தேர்வு எழுத அந்தக் கல்லூரிக்கு  400 மாணவர்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. அங்கே அவர்களுக்கு போதிய வசதி எதுவும் செய்து தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மேலும் தேர்வும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னதாக அவர்களை கல்லூரி நிர்வாகம் சமாதானம் செய்து தேர்வு எழுத வைத்தது. மதியம் 1.45 மணியளவில் தொடங்கிய தேர்வானது 5 மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்படிருந்தது. ஆனால் மாலை 4 மணிக்குத் தொடங்கிய  தேர்வு 6 மணிக்கு மேல் இருட்டத் தொடங்கியது. இதனால் மாணவர்கள் சிரமப்பட தொடங்கியுள்ளனர். மேலும் கல்லூரியில் மின்சார சேவையே இல்லை என்பதும் அப்போது தான் தெரிய வந்தது. 

கல்லூரி நிர்வாகம் ஜெனரேட்டர் வசதியை ஏற்பாடு செய்தது. ஆனால் அனைத்து வகுப்புகளுக்கும் போதுமான மின்சாரத்தை வழங்க முடியாததால் பொறுமையை இழந்த பெற்றோர்கள் தாங்கள் வந்த வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டு, அந்த வெளிச்சத்தில் மாணவர்களை தேர்வு எழுத வைத்தனர். தேர்வு முடிந்தவுடன் இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் மாவட்ட கல்வி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அந்த கல்லூரி மீது விசாரணை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.