படிப்பை தொடங்கும் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் :  போர் முடிவுக்கு வராததால் மாணவர்கள் அச்சம் !!

போரால் உருக்குலைந்த உக்ரைனில் அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகளை நடத்த அந்நாட்டு மருத்துவ பல்கலைக்கழகங்கள் முடிவு செய்திருப்பது இந்திய மாணவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

படிப்பை தொடங்கும் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் :  போர் முடிவுக்கு வராததால் மாணவர்கள் அச்சம் !!

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது.  இதில் கல்வி நிலையங்கள், அணு உலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் நகரங்கள் உருக்குலைந்தன. அங்கு சிக்கிய சுமார் 20 இந்திய மாணவர்களை மத்திய அரசு பெரும் சிரமத்துக்கு பிறகு மீட்டு தாயகம் அழைத்து வந்தது.

மேலும் அவர்களின் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கூறிய நிலையில்,  இதுவரை அதுகுறித்து எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

குறிப்பாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தங்களை இந்திய மருத்துவக்கல்லூரிகளிலேயே சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு போராட்டங்களை நடத்தியும், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயின்று இடையில் திரும்பும் மாணவர்களை இந்தியா கல்வி நிறுவனங்களில் சேர்க்க வழிமுறை இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கைவிரித்தது. இதனிடையே உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர உதவுவதாக ரஷ்யா அறிவித்தது.

இந்தநிலையில் சுமார் 6 மாதங்களாக போர் நீடித்து வரும் உக்ரைனில் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகளை தொடங்க அந்நாட்டு மருத்துவ பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளன. அத்துடன் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் கே. ஆர்.ஓ.கே.1 தேர்வை அக்டோபரில் நேரடியாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கென மாணவர்களிடம் அடுத்த செமஸ்டருக்கான கல்வி கட்டணத்தையும் செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனால் பெரும் குழப்பத்தில் உள்ள மாணவர்கள் கல்வியை தொடர வழியில்லாமலும், போர் மூண்டுள்ள உக்ரைனுக்கு செல்ல விரும்பாமலும் உள்ளனர். அங்கு சென்றால் மீண்டும் போரில் சிக்கி கொள்ள நேரிடுமோ என பெற்றோர்களும் அச்சம் தெரிவிப்பதால் மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.