ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு தொடங்கியது...  பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேச்சு...

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு தொடங்கியது. இதில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு தொடங்கியது...  பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேச்சு...

பருவநிலை மாற்றம் பிரச்சினை தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு, இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்து கொள்ள உள்ளதால், உலக நாடுகள் அனைத்தின் பார்வையும் கிளாஸ்கோ நகர் மீது படிந்துள்ளது. அதே சமயம் பொருளாதார வல்லரசு நாடுகளான சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேரடியாக கலந்து கொள்ளவில்லை என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, நேற்று ரோமில் இருந்து கிளாஸ்கோவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோருக்கு முன்னதாக, இந்த மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று உரையாற்ற உள்ளார். உலக வெப்பமயமாதலை எதிர்த்து இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் யுக்திகள் குறித்து அவர் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற அவரை பாட்டுப்பாடி வரவேற்றுள்ளனர்.