சீனாவின் ’யுவான் வாங்-5’ உளவு கப்பலா? இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையுமா?

சீனாவின் ’யுவான் வாங்-5’ உளவு கப்பலா? இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையுமா?

இந்தியாவின் எதிர்ப்பை மீறி, இலங்கை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ள சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பல், ஹம்பன்தொட்டா துறைமுகத்துக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் ”யுவான் வாங் 5” ஆராய்ச்சி கப்பல்:

சீனா தனது ‘யுவான் வாங் 5’ என்ற ஆராய்ச்சி கப்பலை, இலங்கையின் ஹம்பன் தொட்டா துறைமுகத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கி அன்றிலிருந்து  6 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது.

முதலில் அனுமதி அளித்த இலங்கை அரசு:

சீனாவின் ”யுவான் வாங் 5” ஆராய்ச்சி கப்பலை இலங்கையின் ஹம்பன் தொட்டா துறைமுகத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்வதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

மறுப்பு தெரிவிக்கும் இலங்கை அரசு:

சீனாவின் ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்த நிலையில், ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் உளவு கப்பலை சீனா இலங்கை அருகே நிறுத்துவது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என, மத்திய அரசு தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, 'யுவான் வாங்-5' கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி சீனாவிடம் இலங்கை அரசு தெரிவித்தது. 

இந்தியாவை எச்சரித்த சீனா:

இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தும் தனது முடிவில் உறுதியாக உள்ள சீனா, இலங்கை அரசு தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியது. மேலும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகளில், இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரித்த சீனா, "பாதுகாப்பு கவலைகள்" என்ற பெயரில், சில நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளது. 

இலங்கையை நோக்கி பயணத்தை தொடங்கியது சீனா:

இந்தநிலையில், இந்தியாவின் எதிர்ப்பை மீறியும், இலங்கையின் அனுமதி இன்றியும் சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பல் இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகம் நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது.   

சந்தேகம்:

சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பல் உண்மையிலேயே ஆராய்ச்சி கப்பல் தானா? அல்லது இந்திய மத்திய அரசு கவலை தெரிவிப்பது போல உளவு கப்பலா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால், இந்தியாவின் எதிர்ப்பையும், இலங்கையின் அனுமதியையும் மீறி சீனா தனது கப்பல் பயணத்தை தொடர்ந்திருப்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயமாக கருதப்படுகிறது.