பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் உறவில் மாற்றமில்லை - சீன பொருளாதார நிபுணர்கள் கருத்து

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் சீனாவுடனான இரு தரப்பு உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என பெய்ஜிங்கில் உள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் உறவில் மாற்றமில்லை - சீன பொருளாதார நிபுணர்கள் கருத்து

புதிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தலைமையேற்றிருக்கும் நிலையில் இரு தரப்பு உறவில் பெரிய அளவிலான மாற்றம் எதையும் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என கூறியிருப்பதோடு, பாகிஸ்தானில் முந்தைய பிரதமர்கள் ஆட்சியின் போது சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு, குறிப்பாக ராணுவ ரீதியிலான நட்புறவு நல்ல நிலையிலேயே இருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் நிலைமைகளை  சீனா தொடர்ந்து கவனித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் என நம்புவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஸாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அரசியல் நிலைமை எப்படி மாறினாலும், பாகிஸ்தானுடனான நட்புறவில் சீனா எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த மாதத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ, பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேசியதோடு மட்டுமல்லாமல் ராவல்பிண்டிக்கு சென்று  அந்நாட்டு ராணுவ தளபதி Qamar Javed Bajwa-வையும் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் பேசியிருந்த வாங் இ, இரு தரப்பு உறவின் மேன்மைக்காக பாகிஸ்தான் ராணுவம் பல ஆண்டுகளாக எடுத்து வந்த முயற்சியையும் அவர்கள் ஆற்றிய பங்கையும் பாராட்டியிருந்தார்.