ஏலத்திற்கு வருகிறது நெல்சன் மண்டேலா இருந்த சிறை அறையின் சாவி...

நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவி ஏலம் விடப்பட உள்ளது

ஏலத்திற்கு வருகிறது நெல்சன் மண்டேலா இருந்த சிறை அறையின் சாவி...

கருப்பின போராளியும் தென்னாப்பிரிக்க நாட்டின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவி ஏலம் விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நெல்சன் மண்டேலா தென்ஆப்பிரிக்க நாட்டின் அதிபராவதற்கு முன்பு தனது வாழ்வில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்தார். இதனிடையே ராபன் தீவுகளில் உள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். 

அப்போது அந்த சிறையில் காவலராக இருந்த கிறிஸ்டோ பிராண்ட் என்பவர் நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பரானார். இந்த நிலையில் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விட கிறிஸ்டோ பிராண்ட் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1990ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்கா மெல்ல நிறவெறி அமைப்பில் இருந்து வெளியேறத் தொடங்கியது. 1994ஆம் ஆண்டு பல இனத்தவர்களும் தேர்தலில் போட்டியிட்டனர். அத்தேர்தலில் நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த முதல் அதிபரானார்.

மண்டேலா ஒரே ஒரு முறைதான் பதவி வகித்தார். 1999ல் அவர் தானாக முன்வந்து பதவியிலிருந்து விலகிய வெகு சில ஆப்ரிக்கத் தலைவர்களில் ஒருவரானார் அவர். தென் ஆப்ரிக்காவின் அடுத்த அதிபர் மற்றும் ஏ.என்.சி கட்சியின் தலைவர் என்ற இரு பதவிகளுக்கும் மண்டேலாவுக்கு அடுத்தபடியாக வந்தார் தாபோ இம்பெக்கி. 2013ஆம் ஆண்டு தன் 95ஆவது வயதில் காலமானார் மண்டேலா.