இங்கிலாந்து வரலாற்றின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர்..!

இங்கிலாந்து பிரதமராக முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து வரலாற்றின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர்..!

இங்கிலாந்து மகராணி 2ம் எலிசபெத்தால், நாட்டின் பிரதமராக கடந்த மாதம் 5ம் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டவர் லிஸ் டிரஸ். அவரது தலைமையிலான அரசு வரி குறைப்பு திட்டங்களில் மேற்கொண்ட நடவடிக்கை, பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. இதற்கு சொந்த கட்சியினரே கடும் அதிருப்தி தெரிவித்ததால், அப்பதவியில் இருந்து அவர் கடந்த 20ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின. இந்த போட்டியில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி அமைச்சரான இந்திய வம்சாவளி ரிஷி சுனக், நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட் ஆகியோர் களமிறங்கிய நிலையில், போட்டியிலிருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதனால் 150க்கு மேற்பட்ட ஆதரவு எம்.பிக்களுடன் ரிஷி சுனக் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் மொத்தமுள்ள 357 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களில் 100 பேரின் ஆதரவை மட்டுமே திரட்ட முடிந்த பென்னி மார்டண்ட், பிரதமர் போட்டியில் இருந்து நேற்று விலகினார். இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராகவும், இங்கிலாந்து பிரதமராகவும் ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். பிரிட்டன்  வரலாற்றில் இந்திய வம்சாவளி ஒருவர் பிரதமர் ஆவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லண்டனில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சி தலைமை அலுவலகம் சென்ற ரிஷி சுனக்கிற்கு சக உறுப்பினர்கள் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் பலரும் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய பிரச்னைகளில் இனி இணைந்து பணி ஆற்ற ஆவலுடன் இருப்பதாகவும், பிரிட்டனில் உள்ள இந்தியர்களுக்கு ரிஷி சுனக் பாலமாக திகழ்வதாகவும் பாராட்டினார்.