அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.... 2வது நாளாக தொடரும் அவலம்....

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.... 2வது நாளாக தொடரும் அவலம்....

துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் உள்ள காசியண்டெப் நகர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  அடுத்தடுத்து 5 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.  2-வது நாளாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். துருக்கியில் 1939ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக இது கருதப்படுகிறது.  இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

பலி எண்ணிக்கை:

இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  இந்நிலையில் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மீட்கப்பட்ட குழந்தைகள்:

இந்த மீட்பு பணிகளின் போது கட்டிய இடிபாடுகளுக்கு இடையே புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.  நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில், அந்த குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு அந்த குழந்தை பிறந்துள்ளது.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி அந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரிழந்த நிலையில், குழந்தை மட்டும் இடிபாடுகளில் சிக்காமல் உயிர் பிழைத்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் இருந்து குழந்தையை மீட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.  இதேபோல் பிறந்த சில நாட்களே ஆன மற்றொரு குழந்தையும் மீட்கப்பட்டுள்ளது. 

அவசரநிலை பிரகடனம்:

இதனிடையே நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாத காலம் அவசர நிலை அமலில் இருக்கும் என துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.

உலகெங்கிலிமிருந்து:

இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு, உணவுகள், மருத்துவப்பொருட்கள், எரிபொருட்கள், மீட்பு படை விமானங்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து அனுப்பி வருகின்றன.  இந்தியா சார்பில் துருக்கிக்கு இரண்டு விமானப் படை விமானங்கள் மூலம்  99 பேர் கொண்ட மருத்துவ குழு, 101 பேரிடர் மீட்பு வீரர்கள் என மொத்தம் 200 பேரை அனுப்பி வைத்துள்ளது.  

இதையும் படிக்க:  அதானிக்காக செயல்படும் மோடி அரசு...!