நிலநடுக்க பாதிப்பு: 24 ஆயிரத்தை கடந்தது உயிரிழந்தோர் எண்ணிக்கை...!

நிலநடுக்க பாதிப்பு: 24 ஆயிரத்தை கடந்தது உயிரிழந்தோர் எண்ணிக்கை...!
Published on
Updated on
1 min read

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்து உள்ளது. 

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. ரிக்டர் அளவில் 7 புள்ளி 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டது. 

நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து, பேரிடர் பகுதிகளுக்கு துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் சென்று பார்வையிட்டு வருகிறார். அந்நாட்டில் வரும் மே மாதம் 14-ந்தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இந்த பேரிடரால் தேர்தல் ஒத்திவைக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள், மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்கள் ஆன நிலையில், தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மொத்த உயிரிழப்பு 24 ஆயிரம் கடந்து உள்ளது என சிட்னி மார்னிங் ஹெரால்டு என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.  இதில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com