கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் :  உலக சுகாதார அமைப்பு தகவல்!!

கொரோனா பரவலுக்கு பின் முதன்முறையாக, உலகளவில் வாராந்திர கொரோனா பாதிப்பு 2 புள்ளி ஒரு கோடியாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் :  உலக சுகாதார அமைப்பு தகவல்!!

உருமாறிய ஒமிக்ரான் பரவலுக்கு பின், கொரோனா  தொற்று பாதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதன் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தாலும், உலகளவில் தினசரி உயிரிழப்பு 50 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. 

இந்தநிலையில், மத்திய கிழக்காசிய நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு 39 சதவீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இதேபோல் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு 36 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், பிற பிராந்தியங்களை ஒப்பிடுகையில் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவில்  உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமல்லாது, உலக நாடுகளில் அமெரிக்கா  தான் அதிகபட்ச தொற்று பாதிப்புடன் முதலிடத்தில் இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து பிரான்ஸ் 2. 44 கோடி பாதிப்புடன் 2வது இடத்திலும், இந்தியா 2 புள்ளி 11 கோடி பாதிப்புடன் மூன்றாவது இடத்திலும் நீடிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொற்று உயிரிழப்பு வரிசையிலும், அமெரிக்கா தான் தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் 2வது இடத்திலும் இந்தியா 3 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் 3வது இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று பரவல் குறைந்துள்ளதன் காரணமாக பிரிட்டன் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.