50-வது நாளாக தொடரும் உக்ரைன் - ரஷ்யா போர்...! போரை நிறுத்தப் போவது யார்?-புதினா? ஜெலன்ஸ்கியா?

ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல் 50-வது நாளை கடந்துள்ளது.

50-வது நாளாக தொடரும் உக்ரைன் - ரஷ்யா போர்...! போரை நிறுத்தப் போவது யார்?-புதினா? ஜெலன்ஸ்கியா?

கடந்த  பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கினார் ரஷ்ய அதிபர் புதின். அகதிகளாக அண்டை நாடுகள் நோக்கி வெளியேற தொடங்கினர் உக்ரைன் மக்கள். உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. முதலில் ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைத்த ரஷ்யா, நாள் செல்லச் செல்ல குடியிருப்புகளிலும் தாக்குதலை விரிவுபடுத்தியது. போருக்கு இடையேயும் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்தன. ஆனால், மேற்குலகின் உறுதிமொழிகளை நம்பி, நேட்டோவில் இணையும் முடிவை கை விடப்போவதில்லை என்று உறுதி காட்டினார் அதிபர் ஜெலன்ஸ்கி. உருக்குலையத் தொடங்கியது உக்ரைன். புச்சா நகர் வீதிகளில் மனித சடலங்கள் சிதறிக் கிடக்கும் காட்சி உலகை உலுக்கியது. 

பொருளாதாரத் தடைகள், ஐநா, சர்வதேச நீதிமன்றம் என எதனையும் பொருட்படுத்தாமல்  தாக்குதலைத் தீவிரப்படுத்திய ரஷ்யா, 40 நாட்களுக்குப் பின் போரின் வியூகத்தை மாற்றியது. மற்ற நகரங்களை விட்டு விட்டு மரியுபோலை மட்டும் குறி வைத்தது ரஷ்யா. அதனை கைப்பற்றி விட்டால் டான்பாஸ் பகுதியுடன் கிரீமியாவையும் இணைத்து விடலாம் என்று தாக்குதலில் தீவிரம் காட்டியது.  ஒரு வழியாக நேற்று அந்த நகரில் உக்ரைன் வீரர்கள் சரணடைந்துள்ளனர்.

50 நாளை கடந்துள்ள போரில் இதுவரை உக்ரைன் இழந்தது ஏராளம். ரஷ்யாவுக்கும் குறிப்பிடத்தக்க வெற்றி என்று சொல்வதற்கில்லை. ஆனால், பெரும்பாலான நாடுகளை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளது இந்த மோதல். ஆனால், அது குறித்து கவலைப்படாமல் மேற்குலக நாடுகள் இன்னும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையைத் தொடர்கின்றன. அப்பாவி உக்ரைன் மக்கள்தான் அழிவைச் சந்தித்து வருகின்றனர். 

அதிபர்கள் புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இருவர் மட்டுமே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதுதான் உண்மை நிலை. ஆனால், மேற்குலகம் சொல்வதை மட்டுமே கேட்கிறார் ஜெலன்ஸ்கி. யார் சொல்வதையும் கேட்க மாட்டேன் என்கிறார் புதின். இவர்களில் விட்டுக் கொடுக்கப் போவது யார்?. ஒருவரும் இல்லையென்றால் 100 நாள் ஆனாலும் போர் முடிவுக்கு வராது என்பது மட்டும் உறுதி.