வர்த்தகம், எண்ணெய் ஏற்றுமதியை பிரிக்ஸ் நாடுகளுக்கு மாற்றும் பணி தொடக்கம் - அதிபர் விளாதிமிர் புதின்

 ரஷ்யாவின் வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியை பிரிக்ஸ் நாடுகளுக்கு மாற்றியமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

வர்த்தகம், எண்ணெய் ஏற்றுமதியை பிரிக்ஸ் நாடுகளுக்கு மாற்றும் பணி தொடக்கம் - அதிபர் விளாதிமிர் புதின்

பிரிக்ஸ் வணிக மன்ற பங்கேற்பாளர்களிடையே உரையாற்றிய அவர், ரஷ்ய சந்தையில் சீன கார்கள் மற்றும் இந்தியாவின் பல்பொருள் அங்காடிகளை திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

சீனாவுக்கும் இந்தியாவுக்குமான எண்ணெய் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உருவாகியுள்ளதாகவும் கூறினார். பிரிக்ஸ் நாடுகளின் வங்கிகளுடன்  ரஷ்ய நிதி அமைப்புகளை இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய புதின், அதன் மூலம் புதிய சர்வதேச நாணயத்தை உருவாக்கும் சாத்தியம் குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை சமாளிக்கும் வகையில் ரஷ்யா பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் புதின் குறிப்பிட்டுள்ளார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.