சர்வதேச நீதிமன்றம் ராணுவ நடவடிக்கையை நிறுத்த சொன்னதையும் மீறி தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!!
ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்துள்ள ரஷ்யா, 22-வது நாளாக உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் மிரட்டல்களை புறந்தள்ளி கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய அதிபர் புதின் தொடங்கினார். முதல் நாளில் மட்டும் 200 தாக்குதல்களை ரஷ்யா நடத்தியதாகவும் பொதுமக்கள், வீரர்கள் என 137 பேர் உயிரிழந்ததாகவும் உக்ரைன் தெரிவித்தது. இரண்டாவது நாள் தாக்குதலில் உக்ரைனின் செர்னோபில் நகர் வீழ்ந்தது. லட்சக் கணக்கான மக்கள் நடை பயணமாகவும் வாகனங்கள் மூலமும் அண்டை நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுக்கத் தொடங்கினர்.
அடுத்து வந்த 3 நாட்களில் பெட்ரோல் கிடங்குகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா கார்கீவ் நகரை சின்னாபின்னாப்படுத்தியது. போரின் 5-வது நாளில் பேச்சுவார்த்தை தொடங்கியதால் போரின் வேகம் சற்று தணிந்திருந்தது. ஆனால் அன்றைய தாக்குதலில் இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார்.
அடுத்தடுத்த நாட்களில் கார்கீவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலகம், தொலைக்காட்சி கோபுரம் ஆகியவை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஏராளமான குடியிருப்புகள் சிதிலமானது. கெர்சான் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்ததை உக்ரைனும் ஒப்புக் கொண்டது. பல நகரங்கள் கடும் தாக்குதலை எதிர்கொண்டதுடன் ஸபோரிஸியா அணு மின் நிலையமும் ரஷ்யா வசமானது. ஆயுதத் தொழிற்சாலை, குடியிருப்புகள் என பீரங்கி குண்டுகள் துளைத்து வருகின்றன.
இதனிடையே ரஷ்யா இனப்படுகொலை செய்வதாகவும் உடனடியாக போரை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று பிப்ரவரி 27-ம் தேதி உக்ரைன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய ராணுவ நடவடிக்கைக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ஆனால், உக்ரைன் நேட்டோவில் சேரும் முடிவை கைவிடும் வரை தாக்குதலை நிறுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ள ரஷ்ய அதிபர் புதின், சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது என்று கூறி தாக்குதலை வேகப்படுத்தியுள்ளார்.