தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட ரஷ்யா.. 2 நாடுகளை பின்னுக்கு தள்ளி முதலிடம்.. எதுல தெரியுமா?

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட ரஷ்யா.. 2 நாடுகளை பின்னுக்கு தள்ளி முதலிடம்.. எதுல தெரியுமா?

அதிக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஈரான் மற்றும் வடகொரியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது ரஷ்யா.

உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது புதிதாக 2 ஆயிரத்து 778 பொருளாதாரத் தடைகளை விதித்தன.

அவற்றைத் தொடர்ந்து வேறு பல நாடுகளின் அறிவிப்பால் அது  5 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக உலகளாவிய தடைகள் கண்காணிப்பு தரவுத்தளமான கேஸ்டெல்லம் தெரிவித்துள்ளது. இதுரை ஈரானுக்கு எதிரான 3 ஆயிரத்து 616 தடைகளே அதிகமாக இருந்தது. தற்போது ரஷ்யா அதைத் தாண்டிய நிலையில், அந்நாடு மீதான பொருளாதாரத் தடைகள் நாள்தோறும் அதிகரிக்கப்பட்டே வருகிறது.

இது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக 568 தடைகள் விதித்துள்ள நாடு சுவிட்சர்லாந்து ஆகும். ஐரோப்பிய ஒன்றியம் 518, பிரான்ஸ் 512 என்ற எண்ணிக்கையில் தடை விதிக்க, 568 தடைகள் விதித்துள்ளது ஸ்விட்சர்லாந்து. 

அதனால்தான் பொருளாதாரத் தடை என்பது ரஷ்யா மீது போர்த் தாக்குதல் நடத்துவதற்கு சமம் என்கிறார் அதிபர் புதின். சட்டவிதி இல்லை  என்றாலும் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவுடனான சேவையை நிறுத்தி வருவது தடைகளில் புதிய பரிணாமத்தை காட்டுவதாக உள்ளது.  தடை விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா, ஈரானைத் தொடர்ந்து சிரியா, வட கொரியா, வெனிசுலா, மியான்மர் மற்றும் கியூபா நாடுகள் இடம் பிடித்துள்ளன. இதில் பல நாடுகள் கம்யூனிச நாடுகள் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.

எப்படியோ, உலகப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருந்த ரஷ்யா கடந்த 12 நாட்களுக்குள் மிகப் பெரிய பொருளாதாரத் தடையின் இலக்காக மாறியுள்ளது.   உலகிலேயே போர் காரணமாக இது போன்ற தொடர் பொருளாதாரத் தடைகள் விதிப்பது என்பது வரலாற்று அதிசயமாக பார்க்கப்படுகிறது. 

தடைகளில் பெரும்பாலானவை  தனி நபர் மற்றும் நிறுவனங்கள் சார்ந்ததாக உள்ளன. இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகத்தின் மீது கை வைக்கும்போதுதான் 3-ம் உலகப் போருக்கான முன்னெடுப்பை தொடங்குவார் புதின் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மாற்று ஏற்பாடுகள் செய்யாமல், தேன் கூட்டில் கையை வைக்காது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்பதுதான் தற்போதைய நிலை.