இலங்கையில் அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் டீசல் விலை - அமலுக்கு வரும் டோக்கன் முறை!

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 470 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் டீசலின் விலையும் கடுமையாக உயர்ந்து வருவதால் டோக்கன் முறையை அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் டீசல் விலை - அமலுக்கு வரும் டோக்கன் முறை!

பொருளாதார நெருக்கடி காரணமாக நிகழும் பிரச்சனைகளால் அண்டை நாடான இலங்கை தவித்துக் கொண்டு வருகிறது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்களின் போராட்டமும் அரங்கேறத் தொடங்கியது.

இதுவரை நடைபெற்று வரும் வன்முறைகளினால் ஒரு.எம்.பி உள்பட 10 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட கலவரங்களில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, உள்ளிட்ட மந்திரிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். 

இருப்பினும் மக்களின் பிரச்சனைகள் மட்டும் சற்றும் குறைந்து விடாமல் அதிகரித்துக் கொண்டே தான் போனது. இதையடுத்து மக்கள் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகளை அதிகரித்தது மட்டுமல்லாது டீசல் பெட்ரோல்களின் விலைகளையும் உயர்த்தி வந்தனர். 

இந்நிலையானது இரண்டே மாதங்களில் மட்டும், மூன்றாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்தியுள்ளனர். இதில் பெட்ரோலானது ரூ.50 க்கு அதிகரித்து லிட்டர் ரூ.470 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசலின் விலையும் ரூ.60 அதிகரித்து லிட்டர் ரூ.460 க்கு விற்பனையாகிறது. இந்த விலை நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய நிறுவனமும் இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் இந்த விலை உயர்வை அறிவித்திருக்கின்றனர். இதன் இடையில் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி தாமதத்தின் காரணமாக தட்டுப்பாடு நிலவி பல எரிப்பொருள் நிலையங்கள் மூடும் கட்டத்திற்கு தள்ளப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டதால் ஆங்காங்கே ஐந்து நாள், ஆறு நாள் என வரிசையில் காத்திருந்து பசிப் பட்டினியிலும் , உடல் உபாதைகள் நிகழ்ந்தும் சிலர் இறக்க நேரிடுகிறது. 

இதன் காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் வாங்குவதை தவிர்ப்பதற்காக இன்று முதல் டோக்கன் முறையை அமலுக்கு கொண்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி மந்திரி கஞ்சன விஜேசேகரா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வங்கி நடைமுறை மற்றும் எரிப்பொருள் கொண்டு வருவதில் ஏற்பட்டிருக்கும் சில பிரச்சனைகள் காரணமாக இந்த வாரம் மற்றும் அடுத்த வாரம் வரவேண்டி இருந்த பெட்ரோல் , டீசல், கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகளின் இறக்குமதிக்கு தாமதம் ஆகுமென்பதால் அடுத்த வாரம் வரை பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.