உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்யாவில் இணையுமா? வாக்கெடுப்பில் நிகழ்ந்தது என்ன?

உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்யாவில் இணையுமா? வாக்கெடுப்பில் நிகழ்ந்தது என்ன?

உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பாக வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதையடுத்து அந்த பகுதிகள் விரைவில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட உள்ளன.  


கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா, கிழக்கு உக்ரைனின் லுகான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றியது. இழந்த இடங்களை மீட்க உக்ரைன் முயன்று வரும் நிலையில் கைப்பற்றிய இடங்களை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து அப்பகுதி மக்களிடம் ரஷ்யா வாக்கெடுப்பு நடத்தியது.

ஆனால், இந்த வாக்கெடுப்பால் ஒன்றும் நடக்காது என்று உக்ரைன் கூறி வந்த நிலையில், ரஷ்யாவுடன் இணைவதற்கு 98 புள்ளி 4 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இது குறித்து ரஷ்யா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அறிவித்ததும் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று உற்சாகமாக கைதட்டினர்.

இதையும் படிக்க: பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன??!!

சம்பந்தப்பட்ட பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து அதிபர் விளாதிமிர் புதின் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் அமைதி முக்கியம் என்ற அடிப்படையில் ரஷ்யாவுடன் இணைய சம்மதம் தெரிவித்து வாக்களித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்யா நடத்திய வாக்கெடுப்பை கண்டித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அல்பேனியாவுடன் கூட்டாக கொண்டு வரப்படும் இந்தத் தீர்மானம், உக்ரைனின் எந்த மாற்றப்பட்ட நிலையையும் அங்கீகரிக்க வேண்டாம் என்று உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் என்றும் கூறியுள்ளது.